‘வாரவர் போறவர்‘ யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி! வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ? விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ? 4 முத்தமிழ் நாடுஎன்றன் முன்னையர் நாடு; முற்றிலும் சொந்தம் எனக்கெனப் பாடு; சற்றும் உரிமையில் லாதவர் ஆளச் சரிசரி யென்றது போனது மாள; பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம்; பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம்; சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே சடுதியில் விடுதலை அடைவது நன்றே. 5 212. வாழ்க நம் நாடு நம்நாடு செழிக்க வேண்டும் நாமெலாம் களிக்க வேண்டும் நம்நாடு மட்டும் வாழப் பிறர்நாட்டைத் தவிக்கச் செய்யும் வெம்நாடு களுக்கே வரமோர் விழுமிய ஞான மார்க்கம் எம்நாடு தந்தது என்றே இந்தியன் மகிழ வேண்டும். 1 கண்டவர் மகிழ வேண்டும் கேட்டவர் புகழ வேண்டும் கொண்டவர் குலவ வேண்டும் குறைந்தவர் நிறைந்து மெச்ச அண்டின எவரும் அச்சம் அடிமையை அகற்று மாறு தண்டமிழ் அலைகள் வீசி நம்நாடு தழைக்க வேண்டும். 2 |