348நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மாற்றலர்க்கு இடங்கொடுத்(து) ஏழை
       மக்களைப் பிழிந்துடல் வளர்த்தாய்
கூற்றுவன் கணக்கிடும் நாளில்
       கூறுவை பதில்என்ன மனமே!
வீற்றிருந்து ஆண்டஉன் அரசை
       விற்றுடல் சோம்பினை இனிமேல்
ஆற்றுவை இப்பழி அகற்ற
       அன்னையின் விடுதலைக்கறமே.       4

சொந்த சுதந்தரம் மறந்தாய்
       சோற்றினுக்கு உடல்சுமந்து இருந்தாய்.
பந்தம் கன்றிட நினையாய்
       பாரதத் தாயினைப் பாடாய்
அந்தமி லாதவன் செல்வம்
       அன்னியர்க்(கு) இழந்தனை குடிகள்
கந்தையும் கஞ்சியும் அற்றார்
       காரணம் நீயெனக் கருதாய்.       5

அடிமையிற் பழகினைப் பொழுதும்
       ஆண்மையை மறந்தனை முழுதும்
குடிமுறை குறைந்தனை சிறிதும்
       குலமுறை நினைந்திலை பெரிதும்
மிடிமையிற் கிடந்ததுன் நாடு
       மேன்மையை இழந்ததுன் வீடு
மடமையில் மயங்கியிப் பிறப்பின்
       மகிமையை மறந்தனை மனமே!       6

கொண்டவள் குலக்கொடி வாடக்
       கூத்தியர் மையலிற் குறையும்
வண்டர்கள் எனவல்ல முன்னோர்
       வழக்க ஒழுக்கத்தை மறந்து
கண்டவர் சிரித்திடக் களித்து
       கற்றவர் மொழிகளைப் பழித்தாய்
அண்டிய அயலவர் மயக்கால்
       அழித்தனை மனையறம் அறிவோ?       7