ஜாதியை மதத்தினைப் பழித்துச் சண்டையில் உவந்தனை மனமே வாதுகள் மிகுந்தன நாட்டில் வறியவர் வரிகளால் வருந்த ஏதுஇனி விடுதலை எனவே யாவரும் ஏங்கினர் நல்லோர் ஓதிய ஒற்றுமைக்(கு) உழைத்தே ஒப்புற ஒழுகுவை உயர்வாய் 8 தேனுள்ள தாமரை மேலே தினமுள்ள தவளையைப் போலே நானுள்ள இப்பெரும் நாட்டின் ஞாலம்எல் லாம்திரண் டாற்போல் ஊனுள்ள தேகத்தி னோடும் உன்முன்னே காந்தியொன் றுற்றும் ஏனென்ன என்றிலை மனமே இருந்தென்ன போயென்ன நீயே! 9 ஆண்டவன் உனக்கென்ற நாட்டில் அன்னியர்க்கு அரசளித்து அடிமை பூண்டுடல் வளர்த்தனை நெஞ்சே! புண்ணியம் உனக்கிலை; நரகே. மீண்டும்உன் நாட்டினை மீட்க மெய்ப்பொருள் ஆவியும் ஈந்தே ஆண்டுதொழில் புரிகுவை யாயின் ஆன்ம சுதந்தரம் அடைவாய். 10 குறிப்புரை:-பூதங்கள் - பூதங்கள் ஐந்து. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்; சாதம் - சோறு; கூற்றுவன் - எமன்; ஆவி - உயிர்; தேகம் - உடல்; மிடிமை - வறுமை; ஏத்தன் - புகழ்வோன் (இறைவன்); ஞாலம் - உலகம்; வண்டர்கள் - மங்கலப் பாடகர்கள்; வாதுகள் - வழக்குகள்; கன்றிட - மிகுந்திட, முதிர்ந்திட. |