எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம் தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம். 10 விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால் திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால் சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப் பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம். 11 சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்; காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம் ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும் மூலத்தின் உணர்வெங்கள் மொழி உண்டு பண்ணும். 12 பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும் உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும் இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும் அறமோதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம். 13 விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும்; மெய்ஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடி கற்கும்; மெய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும் அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம். 14 கொல்லாமை பொய்யாமை எனுமிவ்விரண்டில் எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதோர் நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும். 15 குறிப்புரை:- பணி - சொல், வார்த்தை (15); ‘மெய்ஞ்ஞானம்‘ எதிர்சொல் அஞ்ஞானம் (14); இணையற்ற - தனக்கு நிகரில்லாத (8); இரவாமல் - ஒளிக்காமல், மறைக்காமல். |