உயிர்க்கொலையை அஞ்சிஅஞ்சி ஒதுக்க வேண்டும்; உயிர்கொடுக்க அஞ்சாத உறுதி வேண்டும்; பயிர்ச்சியுடன் அன்புநெறி பழக வேண்டும்; பல்லுயிரும் நல்லுறவாம் பரிவு வேண்டும்; முயற்சியில் உணவளிக்கும் தொழில்கள் எல்லாம் முன்னேறப் புதுமுறையில் முனைதல் வேண்டும்; உயர்ச்சியென்றும் தாழ்ச்சியென்றும் பேதமின்றி உழைப்புகளில் சமமான ஊக்கம் வேண்டும். 2 அஞ்ஞானச் சூழ்நிலையை அதிக மாக்கி அருள்மறந்த செயல்களுக்கே ஆசை மூட்டும் விஞ்ஞான வெறிமறைய வேண்டும் என்ற வித்தகமாய்ச் சத்தியத்தின் விளக்கமாய் நிற்கும் இஞ்ஞாலம் இதுவரைக்கும் காணாத் தூயன் எம்மான்அக் காந்திமகான் ஏந்திச் செய்த மெய்ஞ்ஞானத் தவநெறியால் நமது தேசம் மேவியநல் சுதந்தரத்தின் மேன்மை காப்போம். 3 குறிப்புரை:-அவதி - துன்பம்; பரிவு - இரக்கம்; பேதம் - வேறுபாடு; அஞ்ஞானம் -அறியாமை; இதன் எதிர்ச்சொல் மெய்ஞ்ஞானம் (உண்மை அறிவு); மேவிய - பொருந்திய; வித்தகம் - பெருமை, நன்மை, சின்முத்திரை, பேரறிவு, ஞானம். 220. காந்தி தந்த குடியரசு எண்ணரிய தியாகிகளை எழும்ப வைத்த எழுதரிய காந்திமகான் தவத்தி னாலே மண்ணுலகம் இதுவரையில் அறியா நல்ல மார்க்கத்தில் அடிமைமனம் மறையச் செய்து கண்ணனைய சுதந்தரத்தின் காட்சி மேவக் கருதரிய குடியரசு தொடங்கக் கண்டோம் திண்ணமுடன் காந்திவழி நிற்போம் ஆனால் தீராத குறைகள் எல்லாம் தீர்ந்து போகும். 1 |