புண்படுத்தல் எதற்குஎனினும் தீதே என்றும் பொதுவான நல்லறிவை மிகவும் போற்றி உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் இன்றி உயிர்களுக்கும் சமதர்ம உணர்ச்சி காட்டும் பண்புடைய மனப்பான்மை பலிக்க வேண்டி பக்தியுடன் காந்தி வழி பயில்வோ மானால் மண்புகழும் குடியரசு நமதே ஆகும்; மனிதருக்குள் சண்டைகளை மறையச் செய்வோம். 2 சட்டதிட்டச் சிறப்புமட்டும் சரிசெய் யாது சைந்நியத்தின் மிகுதிமட்டும் சாதிக் காது கட்டுதிட்ட உணர்ச்சியுடன் குடிகள் எல்லாம் கடமையெனப் பொறுப்புகளைக் கருத வேண்டும். திட்டமிட்டுக் காத்திருந்து சேவை செய்யும் தியாகபுத்தி குடியரசின் தேவை ஆகும். வட்டமிட்டு நம் அறிவைப் பாது காக்க வள்ளல்அந்தக் காந்தியைநாம் வணங்க வேண்டும். 3 பிறநாட்டு வழிகளைநாம் பின்பற் றாமல் பிற்போக்கு வெறிகளுக்கும் இடங்கொ டாமல் திறம்காட்டி மெய்யறிவின் தெளிவும் சேர்ந்த சீலர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்து கொண்டால் உறங்காமல் காந்திமகான் உபதே சத்தை ஊரூராய்ப் பரப்புவதில் ஊக்கம் கொள்வோம்; அறங்காட்டும் புதுமுறையில் ஆட்சி செய்வோம்; அதற்கென்றே அவதரித்தார் அண்ணல் காந்தி. 4 எந்திரங்கள் தந்தவெறி குறைய வேண்டும்; எங்கெங்கும் கைத்தொழில்கள் நிறைய வேண்டும்; தந்திரங்கள் பணம் பறித்தல் தடுக்க வேண்டும்; தன்னலங்கள் தலையெடுப்பை ஒடுக்க வேண்டும்; |