390நாமக்கல் கவிஞர் பாடல்கள்

யுத்தம் வருமோ எனஒடுங்கி
       ஒவ்வொரு நாடும் மனநடுங்கிச்
சித்தம் திகைக்கிற இப்போதில்
       சிறப்புறும் காந்தியின் மெய்ப்போதம்.       6

அன்னிய அறிஞர்கள் அனைவருமே
       ஆசையின் காந்தியை நினைவுறநீ
என்ன பயித்தியம் உன்றனக்கே
       ஏன்பிற நினைப்புகள் இந்தியனே!       7

சாந்தியை அறிந்தது நம்நாடு!
       சத்தியம் காத்தது நம்நாடு!
காந்தியைத் தந்தது நம்நாடு!
       கருணையின் வழியே நீர்நாடு!       8

245. உத்தமன் காந்தி

உள்ளம் உருகுது கள்ளம் கருகுது
       உத்தமன் காந்தியை நினைத்துவிட்டால்
வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது
       வேர்க்குது இன்பம் தேக்குதடா!       1

சித்தம் குளிர்ந்துள பித்தம் வெளிந்திடும்
       சீரியன் காந்தியின் பேர்சொன்னால்
புத்தம் புதியன முற்றும் இனியன
       பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ!       2

கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது
       கிழவன் காந்தியின் பழமை சொன்னால்!
தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய
       தாட்டிகம் உடலில் கூட்டுதடா!       3

சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது
       சுத்தனக் காந்தியின் சக்திசொன்னால்!
கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக்
       கூடுத டாமனம் தேடுதடா!       4