காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும் கல்விகள் தேடிடும் கருணையை ஊட்டும் சாந்தியைப் புகட்டிடும் சாத்திரம் அதுவே சத்திய நெறிதரும் சூத்திரம் அதுவே (ஜெய)2 இந்திய மக்களின் சுதந்தரக் கீதம் எம்மான் காந்தியின் இணையறு போதம் சிந்தனை செய்வார் வந்தனை புரியும் தெய்விக மந்திரம் அதுவெனத் தெரியும் (ஜெய)3 இல்லறம் துறவறம் இரண்டிலும் சிறந்தே இந்திய விடுதலைக்கு அருந்தவம் புரிந்து சொல்லறம் முழுவதும் சுதந்தர தேவி தூமலர்ப் பதங்களில் தொழுதனன் தூவி, (ஜெய)4 நால்வகை யோகமும் நடத்திய ஞானி நாட்டின் பெருமையைக் காத்தநல் மானி தோல்வியும் வெற்றியும் தொடமுடி யாது துலைபோல் சமரச நிலைபிரி யாத (ஜெய)5 அரசியல் சூதுகள் அனைத்தையும் அகற்றி அன்பின் வழிவரும் ஆற்றலைப் புகுத்தி உரைசெயல் அரிதெனும் உறுதியைக் கொடுத்தான். உலகினில் புதிதுஎனும் அறப்போர் தொடுத்தான்.(ஜெய)6 மண்டலம் முழுவதும் சண்டைகள் மலிய மாந்தர்கள் பெருந்துயர் சேர்ந்துளம் நலிய கண்டுள பின்னரும் காந்தியை நினையார் கல்லையும் மண்ணையும் கட்டையும் அணையார் (ஜெய)7 யுத்த கொடுமைகள் உலகினில் ஒழிய உதித்தநம் காந்தியின் உயர்ந்தநல் வழியை இத்தரை எங்ஙணும் பரப்பிடும் கடமை இந்திய மக்களின் பரம்பரை உடைமை. (ஜெய)8 |