249. சுத்தன் எங்கள் காந்திமகான் மதபேதம் ஆச்சரியம் மறைய வேண்டும்; மனிதரெலாம் ஒருகுலமாய் வாழ வேண்டும் விதம்வேறு நிறம்வேறு வினைகள் வேறாம் விகற்பம்எலாம் ஒருகடவுள் விளையாட்(டு) என்ற நிதமான மெய்யறிவின்நிலைய மாகி நிறைவான பெருங்கருணை சோதி காட்டும் பதியாரும் மோகனதாஸ கரம்சந்த் காந்தி திருநாமம் என்றென்றும் பாரில் வாழ்க! 1 ஆயுதங்கள் மிகச்சிறந்த இட்லர் எங்கே? அவன்துணைவன் முஸ்லோனி அகந்தை எங்கே? மாயமிகும் போர்புரிந்த டோஜோ எங்கே? மாநிலத்தைச் சீர்குலைத்து மறைந்தார் அன்றோ? பேய்புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும் பின்னும் அந்தப் போர்வெறியைப் பேச லாமோ? தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும் தவசிஎங்கள் காந்திசொலும் சாந்தி கொள்வோம். 2 இன்பதுன்பம் எவ்வுயிர்க்கும் ஒன்றே என்றே ஈ,எறும்பு, புழுக்களுக்கும் இரக்கம் காட்டி அன்புவழி வாழ்ந்தவர்கள் தமிழர் தாமே அருள்மிகுந்த ஒருநாடு தமிழ்நா டாகும் முன்பு இருந்த தமிழறிஞர் சேர்த்து வைத்த மூதறிவே மோகனதாஸ் கரம்சந்த் காந்தி நம்பன்இவன் சரித்திரமே உலகைக் காக்க நாமெல்லாம் கடவுளிடம் நயந்து கேட்போம். 3 கொல்லாமை பொய்யாமைஇரண்டும் சேர்ந்த கூட்டுறவே மெய்ஞ்ஞானக் குணமாம் என்ற நல்லாண்மை அறம் வளர்த்த தமிழ்நா டொன்றே நானிலத்தில் அமைதிமிக்க நாடாம்என்றும் |