398நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நம்மையும் புனித ராக்கி
       நம்மையாண்டு அடிமை செய்தார்
தம்மையும் புனித ராக்கித்
       தரணியில் தரும நீதி
மும்மையும் உயிர்க்கச் சாந்த
       மூலமந் திரத்தைக் காட்டும்
செம்மைசேர் ராட்டி னத்தின்
       திகிரியைச் சுழற்றி விட்டாய்.       10

உனைவிடப் பெரியார் இந்த
       உலகினில் இல்லை என்று
நினைவினில் பெரியார் உன்னை
       நிரந்தரம் போற்று கின்றார்
இனியவுன் பெருமை எல்லாம்
       இந்திய மாதா பெற்றாள்
அனையவள் பெற்ற கீர்த்தி
       அடியமும் பெற்ற தன்றோ?       11

ஆண்டவன் ஆணை தாங்கி
       அன்பினை நாட்ட என்று
பூண்டஉன் கொள்கை எங்கும்
       பூமிவேர் ஊன்று மட்டும்
நீண்டஉன் வழிசி றக்க
       நிமலனாம் கடவுள் மாட்டு
வேண்டுவோம் என்று சொல்லல்
       வெற்றுரை ஆகும் அன்றே.       12

குறிப்புரை:- திகிரி - சக்கரம்; சுத்தன் - தூய்மையானவன்;
மூவுலகு - மண் உலகம், மேல்உலகம், பாதாளம்.