புலவர் சிவ. கன்னியப்பன் 397

அடிதடி வாழ்க்கை கொண்டும்
       அன்பினை மறந்து நாளும்
கொடியதாம் பணப்பே யாலே
       குவலயம் அயர்ந்து நொந்து
முடிவதற்கு எங்கேகு என்று
       முரண்படு கின்ற காலை
விடிவது பொழுது போல
       வீசியது உன்றன் காந்தி.       6

குண்டுபீ ரங்கி யாலும்
       கோடியந் திரங்க ளாலும்
மண்டிய செல்வத் தாலும்
       மயக்கிடும் பொருள்க ளாலும்
சண்டைகள் சயத்தி னாலும்
       சலிப்புஇன்றிச் சுகம்எங்கு என்று
மண்டலம் இருண்ட போது
       மதியெனத் தோன்றி னாய்நீ.       7

சாந்தம் ஒன்று இல்லை என்றால்
       சௌக்கியம் இல்லை என்றே
ஆய்ந்தவர் சொன்னது எல்லாம்
       அகந்தையால் மறந்து விட்டு
மாந்தினர் கள்ளே என்ன
       மயக்கமுற்(று) இருந்த காலை
காந்தியென்(று) ஒருவன் தோன்றிக்
       காத்தனன் உலகை என்ப.       8

சத்தியன் என்பார் உன்னைச்
       சாந்தமே என்று சொல்வார்
பித்தனே யாவான் என்பார்
       பேடியென்று ஒருசார் சொல்லும்
சுத்தனே என்பார் இல்லை
       துரோகியென் பாரும் உண்டு
இத்தனை பெயரும் தாங்கும்
       இதுவன்றோ பெரியார் செய்கை?       9