396நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மூவுலகு ஒருங்கே ஆண்டு
       முடிவுஇலாச் செல்வம் எய்தி
ஏவலில் மமதை கொண்ட
       இரணியன் உய்யு மாறு
தாவிய தரணி என்று
       தனியுருத் தாங்கி வந்த
சேவகன் மெச்சு கின்ற
       சிறுவனே யன்ன சீலர்.       2

பகையினால் கொன்று வென்று
       பயம்பட வாழ்ந்து வந்த
வகையிலார் சாதி யோரை
       வழிபடச் செய்ய வேண்டி
மிகமிகத் துன்ப முற்றும்
       மென்மையால் வென்று கொண்ட
மகமது நபியே என்று
       மதியுளார் சொல்வார் உன்னை.       3

அன்புஒரு வடிவாய் வந்தாய்
       அற்புதச் செயல்கள் காட்டித்
துன்பமே சூழ்ந்த தெய்வத்
       துரோகிகள் செய்கை யாலே
வன்பெரும் சிலுவை தன்னில்
       வைத்தவர் அறைந்த போதும்
இன்பமே நுகர்ந்த தேவன்
       ஏசுவே என்பார் உன்னை.       4

கனவில் பிணிமூப் போடு
       சாவினைக் கண்ட பின்னர்
இனியிதன் ரகசி யத்தை
       இன்னதென்று அறிவோம் என்று
கனதன ராச போகக்
       கட்டுஎலாம் விட்டு ஒழித்த
புனிதன்அப் பௌத்தன் என்று
       போற்றுவார் உன்னை யாரும்.       5