40நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
              பணிந்தி டாத மேன்மையும்
       பயமு றுத்தல் என்ப தற்கே
              பயந்தி டாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
              போற்று கின்ற கொள்கையும்
       குற்ற முள்ளார் யாரென் றாலும்
              இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
              கைவி டாத ஏற்றமும்
       இழிகு லத்தார் என்று சொல்லி
              இகழ்ந்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
              தமிழ்மொ ழியால் ஓதி நீ
       மாநி லத்தில் எவருங் கண்டு
              மகிழு மாறு சேவை செய்.       4

ஓடி ஓடி நாட்டி லெங்கும்
              உண்மை யைப்ப ரப்புவாய்;
       ஊன மான அடிமை வாழ்வை
              உதறித் தள்ள ஓதுவாய்;
வாடி வாடி அறம்ம றந்து
              வறுமைப் பட்ட தமிழரை
       வாய்மை யோடு தூய்மை காட்டும்
              வலிமை கொள்ளச் செய்குவாய்;
கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
              செய்கை யற்ற யாரையும்
       குப்பை யோடு தள்ளி விட்டுக்
              கொள்கை யோடு நின்றுநீ
பாடிப் பாடித் தமிழின் ஓசை
              உலக மெங்கும் பரவவே
       பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
              பணியு மாறு சேவைசெய்.       5