ஒன்றினைஒன்று மாய்த்தே ஒருவரை ஒருவர் வாட்டித் தின்றுடல் சுகிக்கும் இந்தத் தீமைசூழ் உலகந் தன்னில் தன்துணைச் சுகங்கள் விட்டுத் தளர்ந்தவர்க்(கு) உடலை ஈந்து நின்றிடும் காந்தி வாழ்வை மறப்பதோ, நினைப்ப தோதான்? 10 தன்னுயிர் போவ தேனும் பிறர்துயர் சகிக்க மாட்டான் பொன்னுயிர் பொதுமைக்கு ஈந்துப் பொறுப்பதே மானம் அஃதே இன்னுயிர் மனித வாழ்வின் ரகசிய மாகும் என்றே உன்னிய காந்தி வாழ்க்கை தாழ்ந்ததோ உயர்ந்த தோதான்? 11 ;வாழ்ந்தவர்வாழ்ந்த வாழ்வின் வழியிழி வழக்கத்தாலே ‘தாழ்ந்தவர்‘ என்பார் தம்மைப் பிரிகிலேன், பிரித்துவைத்தால் வீழ்ந்துயிர் விடுவேன்; என்ற காந்தியின் விரதவார்த்தை போழ்ந்துளங் கலங்கி டாதார் பூமியில் உண்டோமக்கள்? 12 ‘சத்தியம்‘‘சாந்தம்‘ என்னச் சலிப்புறக் கேட்டவெல்லாம் பொத்திய உடைஒன் றோடு புறத்துஒரு அழகும் இன்றி நித்தமும் தன்பாற் குற்றம் நெருப்புஎனக் காய்ந்துநீக்கிச் சுத்தமாம் காந்தி யாகத் தோன்றிடக் கண்டோம்இன்று. 13 |