செவிநாடும்கீர்த்தனைக்குத் தியாகர் இல்லை தேசீய பாரதியின் திறமும் இல்லை புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்த்த உவமானம் வேறுஎவரும் உரைக்க ஒண்ணா உத்தமராம் காந்தியரை உவந்து பேச. 1 சொல்லுவதுஎல்லார்க்கும் சுலப மாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும்சொற்பம் எல்லையின்றி நீதிகளை எழுது வார்கள் எழுதியது பிறருக்கே தமக்குஎன்(று) எண்ணார் தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள் சொன்னதுபோல் செயல்முயன்றார்இவரைப் போல இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம். 2 கொலைகளவுபொய்சூது வஞ்சம் ஆதிக் கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம் சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி உலகிலுள்ள மனிதர்எல்லாம் கலந்து வாழ ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி விலைமதிக்க முடியாத செல்வம் அன்றோ? வேறுஎன்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்? 3 புத்தர்பிரான்பெருந்துறவைப் படிக்கும் போதும் போதிமர நிழல் ஞானம் நினைக்கும்போதும் கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில் களிப்போடே உயிர்கொடுத்த கதையைக்கேட்கும் சத்துருவாய்ச் சொல்லவந்தோர் தமையும் காத்த தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும்போதும் உத்தமரைக் கண்டோமா என்னும் ஏக்கம் ஒவ்வொருநாள் நமக்குஎல்லாம் உதிப்பதுஉண்டே! 4 |