காடுமலைகுகைகளிலே தவங்கள் செய்து காலன்வர அஞ்சாத கலைகள் உண்டு மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்றுசொல்லும் மெலுக்கான வாய்வீரர் வெகுபேர் உண்டு நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டிக் குண்டுபட்டே நான்சாக வேண்டும் என்றார். ஈடுசொல்ல முடியாத தியாகம் செய்ய இப்படியார் காந்தியைப்போல் உயிரைஈந்தோர்? 20 சத்தியமேதம்முடைய தெய்வ மாகச் சாந்தநிலை குறையாநல் தவசி காந்தி இத்தகைய மரணமுற்றது ஏனோ என்றே இறைவனுக்குச் சாபமிட்டுஇங்(கு) ஏங்குகின்றோம். பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி பாலிப்பது அன்றோஅப் பகவான் வேலை? அத்தகைய சாவேதான் அடைய வேண்டி ஆசைசொன்னார் காந்தியதை அமலன்ஈந்தான். 21 கூழும்இன்றிப்பரதவிக்கும் ஏழை மக்கள் குறைதீர்த்துப் பொய்சூது கொலைகள்நீக்கி வாழுமுறை இன்னதுஎன வாழ்ந்து காட்டி வானுறையும் தெய்வமென எவரும் வாழ்த்த மாளும்முறை இதுவெனவே மனிதர்போற்ற மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான் நாளும் அவன் பெரும்புகழை நயந்து போற்றி நானிலத்தோர் நல்வாழ்வு நாட வேண்டும். 22 குறிப்புரை:-வானுறையும் தெய்வம் - தேவர்கள்; காலன் - எமன்; அகிலத்தில் -உலகத்தில்; சபலம் -நிலையற்ற உள்ளம்; தீனர் - இரப்போர். 270. உலகம்வாழ்க! கவிபாடிப் பெருமைசெய்யக்கம்பன் இல்லை கற்பனைக்குஇங்(கு) இலை அந்தக் காளிதாசன் |