448நாமக்கல் கவிஞர் பாடல்கள்

விமலனைப் பணிந்து வெள்ளி
              விழாவினுக்கு ஆசி கூறி
       வீறுடன் என்றும் நின்று
              விளங்கிட வாழ்த்து வோமே.       1

கொள்கையிற் குறைந்தி டாமல்
              குணங்களைப் புகழ்ந்து கூறிக்
       குற்றங்கள் யார்செய் தாலுங்
              கடிந்திடக் கூசி டாமல்
வெள்கிடத் தக்க(து) என்னும்
              எதனையும் வெளியி டாமல்
       விருப்பொடு வெறுப்புக் காக
              வீணுரை விரித்து இடாமல்
தெள்ளிய சொற்கள் சேர்த்துத்
              தெளிந்துரை தீட்டி நாட்டின்
       சேமமே கருதும் ‘ஈழ
              கேசரி‘ திறத்தை யாரும்
உள்ளுற புகழ்ந்து பேசி
              உவப்புறத் தகுந்த தாக
       உற்றதாம் இந்த வெள்ளி
              விழாவினை உலகம் வாழ்த்தும்.       2

குறிப்புரை:-‘ஈழகேசரி‘ - இலங்கையிலிருந்துவெளிவரும் இதழ்;
வெள்கி - வெட்கப்படத்தக்க.

275. கவிஞன் கனவு

கவிபாடிக் கவிபாடிக்
              காலம் கழிப்பேன்
       கவலைகள் யாவையும்
              விட்டே ஒழிப்பேன்
புவிநாடும் இன்பத்தில்
              நிம்மதி இல்லை
       பூமியினுக்(கு) அப்பாலுள்ள
              இன்பங்கள் சொல்லும்.       1