விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு நாடுகளில் விரியும் ஞானம் பசைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம் தமிழ்மொழியில் பலக்க வென்றே திசைச்சொல்லும் கென்றுதனி இடங்கொடுத்தார் இலக்கணத்தில் தெரிந்த முன்னோர் இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக் கிலக்கணநூல் எங்கே? காட்டு? 4 எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை என்னசெய்யும்? என்றே முன்னோர் வந்தபிற மொழியையெலாம் வரவேற்றுத் தமிழ்மொழியை வளரச் செய்தார்; செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல் மக்களுக்குத் திரித்துக் கூறி இந்திமொழி வந்ததென்றே இகழ்ந்துரைப்போர் தமிழ்நாட்டின் பெருமை எண்ணார். 5 பூச்சிபுழு உயிர்களையும் சமமென்று போற்றினவர் தமிழ ராவார். பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப் பிரித்துவிடத் தமிழர் பேசார்; ஏச்சிலொரு இன்பமுள்ளோர் எக்காலும் தமிழர்களின் இனத்தைச் சேரார்; கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே அதற்குநல்ல சாட்சி கூறும். 6 வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத் தமிழ்நாட்டார் வாழ்ந்த தில்லை; கூறுபடும் பலநாட்டார் கூடிநலம் குலவியதித் தமிழர் நாட்டில்; மாறுபடும் பலமதமும் மருவிமனம் கலந்ததெங்கள் தமிழன் மாண்பு; தேறிமனம் தெளிவடைவோம்; தமிழர்களின் பெருங்குணத்தைத் தெய்வங் காக்கும். 7 |