46நாமக்கல் கவிஞர் பாடல்கள்

24. எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7