புலவர் சிவ. கன்னியப்பன் 453

காதலை இன்னதென்று - செய்து
       காட்டும் புறாமணியே
வேதனைப் புல்லடிமை - விட்டு
       விடுதலை விடிவது எப்போ?       5

கூடும்கட் டத்தெரியீர் - ஆனால்
       கொஞ்சுங் குரங்குகளே!
நீடும் அறிவிருந்தும் - உங்கள்
       நிம்மதி பெற்றிலன் நான்.       6

ஆடும் களிமயிலே! - ஒரு
       ஆரூடம் சொல்லுவையோ?
தேடும் உரிமைகளை - இந்தத்
       தேசம் அடைந்திடுமா?       7

காகம் வழிவிடுமா? - நல்ல
       கருடன் வலம் வருமா?
நாகம் சகுனமுண்டா? - ஒரு
       நரியேனும் முன்வருமா?       8

என்று மனந்தளர்ந்தே - நான்
       ஏங்கித் தவித்து நின்றேன்
வென்றி தருந்துணைபோல் - ஒரு
       விண்ணொலி பெண்குரலாய்;       9

ஞானக் குலத்தில் வந்தாய் - பல
       நற்றவம் உற்றவன்நீ
ஏன்உனக் கிந்தமதி? - விட்டே
       எழுந்திரு என்மகனே!       10

வெள்ளைத் திரைமேலே - படம்
       வீசும் நிழல்போலே
துள்ளிய துன்பம்எல்லாம் - கணம்
       தோன்றி மறைவ(து) அன்றோ?       11