452நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஏது துன்பம்துய ரேனும் - காதல்
       இசைந்த எல்லைவர நாணும்.       2

கணுவி னோடுகணுக் காதல் - ஒரு
       கரும்பு நல்ல சுவை ஆதல்
கணவ னோடுபெண் காதல் - வீடு
       கலக மற்றதென ஓதல்
அணுவி னோடு அணுக் காதல் - தான்இவ்
       வகில லோகநிலை ஆதல்
பணிவி னோடு அதைப் பார்க்கின் - அதில்
       பரமன் அருள்விளங்கும் யார்க்கும்.       3

278. திக்குத் தெரியவில்லை

திக்குத் தெரியவில்லை - என்ன
       தீவினை செய்தேனோ!
மக்கள் படுந்துயரைச் - சற்றும்
       மாற்ற வகையறியேன்!       1

கூவும் கருங்குயிலே! - ஒரு
       குறிசொல்ல மாட்டாயா?
தேவன் அருள்வருமா? - சுற்றும்
       தீமைகள் தீர்ந்திடவே!       2

பாடும் பசுங்கிளியே! - என்றன்
       சாதகம் பார்த்துச் சொல்லு!
நாடும் சுதந்தரத்தை - எந்த
       நாளில் அடைந்திடுவேன்?       3

செய்கை சுறுசுறுப்பாம் - சிறு
       சிட்டுக் குருவிகளே!
வைவதை விட்டுவிட்டு - ஒரு
       வாழ்த்துரை சொல்லீரோ?       4