புலவர் சிவ. கன்னியப்பன் 471

ஊரெலாம் செழிக்க வேண்டும்;
       உயிரெலாம் களிக்க வேண்டும்;
நேரிலாப் புதுமை மிக்க
       சமுதாயம் நிறுவ வேண்டும்.
பாரெலாம் நமது நாட்டின்
       பெரும்புகழ் பரப்பி, மக்கள்
போரெலாம் ஒடுங்க வேண்டும்
       என்பதே பொழுதும் பேச்சாம்.       15

;அடிமைகள் இல்லா நாடும்
       அன்புஅறம் அரசு செய்யக்
கடிதரும் சாதி பேதக்
       கட்சிகள் இல்லா நாடும்
குடிகொலை களவின் அச்சம்
       கொஞ்சமும் இல்லா நாடும்
விடிவதும் எப்போது; என்ற
       பேச்சையே விரும்பிப் பேசும்.       16

வாய்மையும் கருணை சேர்ந்த
       வாழ்க்கையே வகுத்துக் கூறித்
தூய்மையைப் புகட்டல் ஒன்றே
       இலக்கியத் துறையாய்க் கொண்ட
தாய்மொழித் தமிழைப் போற்றல்
       தனியறம் என்றே நல்ல
ஆய்வுடை அறிஞர் தம்மை
       அடிக்கடிக் கூட்டிப் பேசும்.       17

ed;புதியநல் எண்ணம் வேண்டும்;
       வாழ்க்கையிற் புதுமை வேண்டும்;
மதிப்புடன் நம்மைக் கண்டு
       மற்றநாட் டவர்கள் எல்லாம்
துடிப்புடன் தொடர எல்லாத்
       துறையிலும் புதுமை தோன்ற
விதிப்பயன் என்ற பேச்சை
       விட்டிட வேண்டும்; என்பான்.       18