வீரர்கள் கதையைப் போற்றும், வெற்றியை வியந்து வாழ்த்தும் தீரர்கள் முன்னே வாழ்ந்தோர் திறமையின் சிறப்பைப் பேசி சூரர்கள் பலபேர் சொன்ன சுதந்தர உரைகள் சொல்லி ஆரொரு மனிதற் கேனும் ஆண்மையே அழகாம் என்பான். 11 ‘காதலே தெய்வம்‘ என்பான்; ‘கடவுளே காதல்‘ என்பான்; பூதல வாழ்வு முற்றும் காதலில் பொருந்தும் என்பான்; ஆதலால் காதல் என்னும் அப்பொருள் அடைந்து இலாதார் சாதலே மேலாம் என்று சாற்றுவான் சலிப்பில் லாமல். 12 பெண்களை அழகுத் ‘தெய்வப் பிறிதொரு பிரதி‘ என்பான்; பண்கொளப் பாடி ஆடிப் பல்கலைப் பயிற்சியோடும் கண்கொளும் உடைகள் பூண்டு களிதரும் காட்சி யாக எண்கொளும் இனிமைக்கு எல்லாம் இருப்பிட மாக எண்ணும். 13 பற்பல வழியில் நாட்டின் பொதுநலம் பரிந்து பேசிச் சொற்பொழி வாற்ற லுள்ளான்; சுதந்தர ஆசை யூட்டும் அற்புதத் திறமை யோடும் அறிவுடன் அமைவ தான கற்பனை மிகுந்த நல்ல கதைகளும் காட்டிச் சொல்வான். 14 |