56நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மூவேந்தர் ஆட்சிக்கு முன்னா லிருந்தே
இந்திய நாட்டிலும் அந்நிய இடத்திலும்,
திரவியம் தேடித் திரைகட லோடியும்,       25

கப்பல் ஓட்டிக் கடலைக் கடந்தும்,
அந்நிய மன்னர் அழைப்புக் கிணங்கியும்,
எவரும் மதித்தே எதிர்கொளும் இனமாய்,
எங்கும் சென்றே எவரொடும் பழகி
ஆண்டுகள் பற்பல ஆயிர மாக       30

வாழ்ந்த தமிழர் வருந்திச் சேர்த்தது.
உலக வழக்குடன் ஒட்டியே நின்று
‘கன்னித் தமி‘ழென இன்னும் களிக்கப்
புதுப்புது அறிவுகள் புகுதற் கிடந்தர
எண்ணிச் செய்த இலக்கணம் உள்ளதாய்,       35

உண்மை அறிவில் ஊன்றிய வேருடன்
பருத்துப் படர்ந்த பற்பல கிளையுடன்
விழுதுகள் எண்ணில வெவ்வேறு தாங்க
ஊழிக் காற்றே உரத்தடித் தாலும்
அசைக்க முடியா ஆல மரம்போல்       40

நேர்ந்தவர்க் கெல்லாம் நிழலே கொடுத்தும்
அலுப்பைத் தீர்த்தும் அமைதியைத் தந்தும்
கவிதையும் காட்டி, களிக்கச் செய்திடச்
செழித்து நிற்பது செந்தமிழ்ச் சிறப்பு;
தமிழைப் போற்றுதல் தமிழரின் கடமை.       45

தமிழின் வளர்ச்சியை மனத்தில் தரித்தும்
அந்நியர் அறிவையும் தமிழில் ஆக்கியும்
அவசிய மானால் அருவருப் பின்றிப்
பிறமொழிப் பதங்களைத் தமிழில் பிணைத்தும்
தொழில்முறை அறிவுகள் தமிழில் தொகுத்தும்       50