ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும் ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த் தீமையான இருளைநீக்கி வாய்மை அன்பு நீதியாய்ப் பாகமாகப் பரிவுகூறிப் பக்கம் வந்து நிற்குமே பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்! 3 குறிப்புரை:-தேசு - அழகு; கீர்த்தி நேயமாக - அன்பாக (1); நித்தம் - நாள்தோறும், மேனி- உடல், வடிவம். 43. திலகர்பிரான் (திலகர் இறந்த சேதியைக் கேட்ட தினம் பாடியவை) இடியது விழுந்த தோதான் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி இருசெவி நுழைத்த தோதான்! தடியது கொண்டே எங்கள் தலையினில் அடித்த தோதான் தைரியம் பறந்த தோதான்! கொடியது சாய்ந்த தோதான் கொடுவிஷம் உச்சிக்கேறிக் குறைந்திடுங் கொள்கை தானோ. திடமுள தீர வீரர் திலகனார் மாண்டா ரென்ற தீயசொற் கேட்ட போது! 1 ‘என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம்‘ என்னுமொரு மந்திரத்தை எங்கட் கீந்த மன்னவனே! திலகமுனி மகாராஜா எம்முடைய மராட்டியர்தம் மடங்க லேறே! உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்தி லணிவகுத்தே உத்தரவை எதிர்பார்த் திங்கே இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற இச்சமயம் இறக்க லாமோ! 2 |