திலக மகரிஷியின் கதைபாடும் - போது சிதம்பரம் பிள்ளை வந்து சுதிபோடும்; வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்க வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும்பதவி. (சிதம்) திருக்குறள் படித்திட ஆசைவரின் - புதுச் சிதம்பரம் பிள்ளைஉரை பேசவரும்; தருக்கிடத் தக்கபெருந் தமிழ்ப்புலமை - கற்றார் தலைவணங் கிப்புகழும் தனிநிலைமை. (சிதம்) சுதேசிக் கப்பலிட்ட துணிகரத்தான் - அதில் துன்பம் பலசகித்த அணிமனத்தான்; விதேச மோகமெல்லாம் விட்டவனாம் - இங்கே வீரசு தந்தரத்தை நட்டவனாம். (சிதம்) நாட்டின் சுதந்தரமே குறியாக - அதை நாடி உழைப்பதுவே வெறியாக வாட்டும் அடக்குமுறை வருந்துயரை - வெல்ல வாழும் சிதம்பரத்தின் பெரும்பெயராம். (சிதம்) குறிப்புரை:-தருக்கு - செருக்கு, கர்வம். 50. சிதம்பரம் பிள்ளை நினைவு மடமையதோ பிறநாட்டார் மயக்கந் தானோ மக்களெல்லாம் சுதந்தரத்தை மறந்தா ராகி அடிமைஇருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி யாரும் தலைநீட்டவெண்ணா அந்த நாளில் திடமனத்துச் சிதம்பரப்பேர் பிள்ளை யாவான் செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால் உடல்சிலிர்க்கும் உயிர்நிமிர்ந்தே உணர்ச்சி பொங்கும் உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகு மன்றோ? 1 எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில்; எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார் |