பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றி யேபோல் பிறர்நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு; போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டிப் புதையல்வந்து கிடைத்ததுபோல் பூரிப் பெய்தித் தாயெதிர்த்த குழந்தைகள்போல் ஜனங்கள் பார்க்கத் தாவிவரும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. 6 ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி இந்திரியச் சொந்த சுகங்களுக்கே வீசிக் கோழையராய்ப் பிறர்உழைப்பில் கோலங் கொள்ளும் கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு; வாழையைப்போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக் காக வாழிஜவார் வாழிஜவார் வாழி யென்று வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. 7 64. ஜவஹர் நினைவு நேருவை நினைத்தவுடன் நேர்மைக் குணம் என்னும் மேருவை நிகர்த்தஒளி மின்னிவரும் முன்னால் பாரிலுள்ள யாவரும்நம் பந்துஜன மென்றே கோரும்ஒரு மெய்யுணர்வின் கொள்கைவரும் அன்றே? 1 ஜவஹரை நினைத்தவுடன் ஜாதிநிற பேதம் அவனியில் அழித்தொழிய ஆர்வம்நம தாகும். நவநவ உணர்ச்சிகளின் நன்னெறியை ஊட்டும் நல்லதுணை வல்லனென நம்மறிவு காட்டும். 2 |