152நாமக்கல் கவிஞர் பாடல்கள்

97. அருட்பெருஞ் சோதி

பல்லவி

அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் சுடராம்
அண்ணல் காந்தி மகான்

அநுபல்லவி

பொருட்பெரும் அவன்அருள் பொன்னெறி போற்றிடில்
பூமியில் நிறைந்துள தீமைகள் மறைந்திடும்.       (அருட்)

சரணங்கள்

பஞ்சமும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்திடும்
பாதகம் செய்யச் சொல்லும் தீதுகள் குறைந்திடும்
கொஞ்சமும் இன்பமில்லாக் கோடானு கோடிமக்கள்
கும்பி எரிச்சலெல்லாம் அன்பின் குளிர்ச்சிபெறும்.       (அருட்)1

ஜாதி மதக்கலகம் சண்டைகள் தீர்ந்திடும்
சமுதாயங்களில் சமரசம் சேர்ந்திடும்
நிதி நெறிதவறா நினைவுகள் வளர்ந்திடும்
நித்திய வஸ்துஉண்மை பக்தியும் கிளர்ந்திடும்       (அருட்)2

அரசியல் துறையிலும் ஆட்சியின் முறையிலும்
அயலெந்தக் காரியம் முயல்கிற நெறியிலும்
உரைசெயில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்
உண்மையின் ஒளிதொடும் நன்மையின் வழி சொலும்.       (அருட்)3

98. தியாகராஜன்

பல்லவி

தெய்வத்தின் ஒரு பெயர் தியாகராஜன் என்பதனைத்
தெரிவிக்க வந்த காந்தி தேவதூதன்

அநுபல்லவி

வையத்தில் காந்தியைப்போல் பிறர்க்கென்றே வாழ்ந்திட்ட
வண்மையில் தியாகத்தில் உண்மையில் யாருமில்லை       (தெய்)