சரணங்கள் சாந்தத்தின் பலன்களும் சத்திய நலன்களும் சமரச வாழ்க்கையின் அமைதியும் துலங்கிட வாழ்ந்துநன் னெறிகளை வகுத்துத் தொடுத்தவர்கள் வடித்துக் கொடுத்ததெல்லாம் நடத்தி முடித்த வள்ளல். (காந்தி)1 அன்பின் கலைபுரிந்து அருளின் நிலை தெரிந்து அச்சமும் ஆசைகளும் மிச்சமில்லா தகற்றி இன்ப நிலையுரைத்த எண்ணரும் யோகிகள் எண்ணிய நல்லறங்கள் பண்ணிமுடித்த எங்கள் (காந்தி)2 தானமும் தருமமும் தவங்களும் மதங்களும் தாரணி முயன்றுள வேறுள நெறிகளும் ஞானம் பெறமுயலும் நல்வழி யாவையும் நாடும் குணங்களெல்லாம் கூடிநிறைந்த எங்கள். (காந்தி)3 120. ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி பல்லவி சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம் சுபஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி நாமம். அநுபல்லவி நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம் நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம் (சுதந்) சரணங்கள் அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு. (சுதந்)1 |