புலவர் சிவ. கன்னியப்பன் 217

158.தொண்டு செய்ய முந்துவோம்

நாக ரீக மென்று சொல்லி
       எந்தி ரத்தை நம்பியே
வேக மாக யுத்த மென்ற
       குழியில் வீழ்ந்து வெம்பினார்
போக வாழ்வை எண்ணி எண்ணிப்
       போட்டி யிட்டு முண்டியே
சோக முற்றே உலக மெங்கும்
       வறுமை மிஞ்சத் தண்டினோம்.       1

உண்டு டுத்துக் குடிவெ றித்திங்
       குலகை ஆளும் ஆசையே
கண்டு விட்ட இன்ப மாகக்
       கால முற்றும் பேசியே
சண்டை யிட்டுக் கொன்று வீழ்த்தச்
       சக்தி தேடும் ஒன்றையே
கொண்டு விட்ட கொள்கை யாக்கிக்
       கொடுமை சூழ நி்ன்றுளோம்.       2

ஒருவர் நாட்டை ஒருவர் பற்றி
       உரிமை பேசி ஆள்வதும்
இருவர் மூவர் சேர்ந்து கொண்டும்
       இம்சை காட்டி வாழ்வதும்
பெருமை என்று எண்ணி வந்த
       பித்துக் கொண்ட கொள்கையால்
தரும மற்று மனித வர்க்கம்
       தலைகு னிந்து வெள்கினோம்.       3

எந்த வேளை என்ன வென்று
       ஏது சண்டை கூடுமோ!
எந்த நாட்டில் எந்தத் தேசம்
       எந்தக் குண்டைப் போடுமோ!