364நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கொலைவழி மறுப்பவர் தமிழ்மக்கள்
       கொள்கையில் சிறப்பவர் தமிழ்மக்கள்
நிலைதரும் வள்ளுவன் மொழிகற்போர்
       நிச்சயம் காந்தியின் வழிநிற்பார்.       12

குறிப்புரை:- தணல் - நெருப்பு; சற்குணம் - நல்ல குணம்;
இம்சை வழி - துன்ப வழி.

225. புரட்சி வேண்டும்

புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
       புரட்சி வேண்டுமடா!
புரட்சி என்னும் சொல்லின் பொருளினும்
       புரட்சி வேண்டுமடா!       1

புத்தம் புதிதென நத்தப் படுவதைப்
       புரட்சி என்றிடலாம்;
நித்தம் கண்டுள சொத்தை வழிகளில்
       புரட்சி நின்றிடுமோ!       2

மருட்சி தந்திடும் முரட்டு வார்த்தையில்
       புரட்சி வந்திடுமோ?
திரட்சி யாகிய மகிழ்ச்சி வாழ்க்கையைத்
       தீயன தந்திடுமோ!       3

பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால்
       புரட்சி அதுவாகும்;
சதிபல செய்திடும் வழிகளில் விழுவதும்
       புரட்சி மதியாமோ?       4

வேதனை யேதரும் தீதுள நெறிபல
       புரண்டு வீழ்ந்திடும்ஓர்
போதனை தந்திடும் நூதன வழிகளில்
       புரட்சி சூழ்ந்திடுவோம்.       5