374நாமக்கல் கவிஞர் பாடல்கள்

231. தேசபக்தர் திருக்கூட்டம்

தேச பக்தர்திருக் கூட்டம் - தேச
சேவை செய்வதுஎங்கள் நாட்டம்;
பாச பந்தம் எல்லாம் ஓடி - விடப்
பாரதப் பெருமை பாடி       (தேச)1

பிச்சை எடுக்கவந்தது அல்ல - வேறு
பிழைக்க வழியிலை என்று அல்ல
இச்சை வந்துமிகத் துள்ள - தேசம்
இருக்கும் நிலைமைதனைச் சொல்ல.       (தேச)2

தூங்கித் தூங்கிவிழும் தமிழா! - உன்
தூக்கம் போக்கவந்தோம் தமிழா!
ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா! - உன்னை
எழுப்ப வந்தசக்தி தமிழா!       (தேச)3

எழுந்து நின்றுகண்ணைத் துடைத்தே - உன்
இருகை யாலும்கொடி பிடித்தே
அழுந்திக் கீழிருந்து வாடும் - அன்னை
அடிமை நீக்கவழி தேடும்.       (தேச)4

வெட்டி வெட்டியெறிந் தாலும் - எமை
வேறு இம்சைபுரிந் தாலும்
கட்டி ரத்தம் சொரிந்தாலும் - நாங்கள்
தூய்மை மாறிடோம் நாளும்.       (தேச)5

சாந்த மூர்த்தியந்தக் காந்தி - சொன்ன
சத்தி யந்தனையே ஏந்தி
மாந்தர் யாரும்இனி உய்ய - உயர்
மார்க்க போதனைகள் செய்ய.       (தேச)6

தேவி சக்திதுணை கொண்டு - இந்தத்
தேசம் சுற்றிவர வென்று
கூலிக் கூலியெங்கள் தொண்டு - செய்யக்
குறைகள் தீரும்இனி நன்று.       (தேச)7

குறிப்புரை:-இச்சை - விருப்பம்; மாந்தர் - மக்கள்.