புலவர் சிவ. கன்னியப்பன் 375

232. சத்தியச் சங்கூதுவோம்

‘சத்தியம் நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்!
       ‘சாந்தமே ஜெயிக்கும்‘ என்று சங்கூதுவோம்!
‘நித்தியம் கடவுள்‘ என்று சங்கூதுவோம்!
       ‘நீர்க்குமிழாம் வாழ்க்கை‘ என்று சங்கூதுவோம்!       1

‘நீதியே நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்!
       ‘நியாயமே கெலிக்கும்‘ என்று சங்கூதுவோம்!
‘வாதுசூது பொய்மையாவும் ஒன்றோ டொன்றாய்
       வம்புகொண்டு மறையும்‘ என்று சங்கூதுவோம்!       2

‘புண்ணியம் பலிக்கும்‘ என்று சங்கூதுவோம்!
       ‘பொறுமையே கெலிக்கும்‘ என்று சங்கூதுவோம்!
‘மண்ணிற்செய்த நன்மைதீமை அல்லாமலே
       மற்றதொன்றும் மிச்சமில்லை‘ என்றுஊதுவோம்!       3

‘தருமமே நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்!
       ‘தானமே தழைக்கும்‘ என்று சங்கூதுவோம்!
‘கருமமே சிறக்கும்‘ என்று சங்கூதுவோம்!
       ‘கடவுளுண்மை வடிவம்‘ என்று சங்கூதுவோம்!       4

‘உண்மையைக் கடைப்பிடித்து உயர்ந்தவர்களை
       உலகமோசம் என்ன செய்யும்‘ என்றூதுவோம்!
‘தண்மையான சாந்திபெற்ற தக்கோர் முன்னே
       சஞ்சலங்கள் ஓடும்‘ என்று சங்கூதுவோம்!       5

‘கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர் முன்னால்
       கூர்மழுங்கும் ஆயுதங்கள்‘என் றூதுவோம்!
‘பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப்
       பயமுறுத்த ஒன்றுமில்லை‘ என்றூதுவோம்!       6

‘அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை
       அரசனும் வணங்கும்‘ என்று சங்கூதுவோம்!
‘வன்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாம்இதோ
       வழிகொடுத்து விலகும்‘ என்று சங்கூதுவோம்!       7