புலவர் சிவ. கன்னியப்பன் 427

நயமிக மாந்தருள்நட்புகள் வளரும்
       நகைமுகம் இனியசொல் எங்கணும் ஒளிரும்
தயவொடு தருமமும் தானமும் ஓங்கும்
       தரித்திரக் கொடுமைகள் யாவையும்நீங்கும்
பயமற உலகினில் பற்பல நாடும்
       பகையற வாழ்ந்திடல் அதனாற் கூடும்.       1

இத்தரைமீதினில் இதுவரை தோன்றி
       இகபரம் இரண்டிலும் சிந்தனை ஊன்றி
முத்தரும் யோகரும் முனிவரும் யாரும்
       முற்றிய அறிவென முடிவுறக் கூறும்
சத்திய சாந்தச் சமரசம் மேவும்
       சாதனை என்கிற போதனை யாவும்
புத்துயிர் பெற்றிடக் காந்தியும் பிறந்தார்
       பூமியில் இந்தியத் தாய்மிகச் சிறந்தாள்.       2

அன்புஅறம்பெருகிட அதுதுணை புரியும்
       அரசியல் முறையிலும் அதன்பொருள்விரியும்
துன்பமுற் றவர்களின் துயர்களைக் குறைக்கும்
       தூய்மையும் வன்மையும் தொழில்களில்நிறைக்கும்
இன்பமும் செல்வமும் பொதுப்பொருள் ஆகும்
       இரப்பவர் என்பதும் இல்லாது போகும்
வம்பரும் வணங்கிடும் காந்தியின் போதம்
       வளர்ப்பது வேதம் வாழ்க்கையின்கீதம்.       3

குறிப்புரை:-வம்பரும் - பகைவரும், அயலாரும்; போதம் -
அறிவு, ஞானம்; போதனை- தூண்டுகை.

263.எச்சரிக்கை

எச்ச ரிக்கை எச்சரிக்கை
       எச்ச ரிக்கை கொள்ளு வோம்
அச்ச மற்ற வாழ்வு காண
       இச்சை யுற்ற யாவரும்       (எச்)1