ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப் பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான் பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ? 3 அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான். அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான் கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மை எண்ணம் மாற்றினான் கேடிலாது மோடிசெய்யும் காந்தி மார்க்கம் போற்றினான். 4 அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான் அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான் சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான் சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான். 5 குறிப்புரை:-சமயபேதம் - சமய வேறுபாடு; வீறு - வெற்றி, பெருமை;ப்ரபஞ்சம் - இவ்வுலகம். 53. பாரதி நினைவு சுப்ரமண்ய பாரதியை நினைந்திட் டாலும் சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும்; இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும்; ‘இந்தியன்நான்‘ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம்; எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்; எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும் ஒப்பரிய ‘தமிழன்‘ எனும் உவகை ஊறும்; உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்கம் உண்டாம். 1 அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும்; அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும்; துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச் சுதந்தரத்தை விட்டுவிடாத் துணிவு தோன்றும்; |