பக்கம் எண் :

11

  வேதநாயகம் பிள்ளை வரலாறு
       வேதநாயகம்பிள்ளையவர்கள் தாம் பாடிய எளிமையும் தெளிவும், இனிமையும், செறிவும், அறிவும், திட்ப நுட்பமும் ஒருங்கு திகழும் 'நீதிநூலை'ப் பிள்ளையவர்களைக் கொண்டு பார்வையிடச் செய்து, அவர்கள் சாற்றுக் கவியுடன் அரங்கேற்றுவித்தனர்.
  சோறு வழங்கல்
       பின்பு, திருமயிலாடுதுறை யென்னும் மாயூரத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு அமர்ந்திருக்கும் நாளில் கொடிய வற்கடம் வந்தது. வற்கடமாகிய பஞ்சத்தால் மக்கள் உணவின்றி மாண்டனர். அருளுடையார் உள்ளம் மக்கள் உணவின்றி மாள்வதைக் கண்டு வாளாவிராது; மக்களுக்கு எந்த வகையிலும் உணவளித்து மாளாது வாழவைக்க வேண்டுமென்றே துணியும். அம்முறையில் வேதநாயகம் பிள்ளையவர்களும் பெருமுயற்சி செய்து, 'சொல்லாற் சாற்றிச் சோறு' வழங்கி மக்களை உய்வித்தனர். இச்செயல் திருவீழிமிழலையில் அரசும் பிள்ளையாரும் ஆண்டவன் அருளிய படிக்காசால் பஞ்சகாலத்து உணவூட்டி மக்களை உய்வித்த திருவருட் செயலை நினைவூட்டும்.
  பெண்மதிமாலை வெளியிடல்
       அகத்து வாழ் பெண்கள் அறிவு நிரம்பியவர்களாக இருந்தாலன்றிப் புறத்துச் செல்லும் ஆடவர்கள் புலமையும் ஆண்மையும் பொருளீட்டலும் அருள்கூட்டலும் நாடும் மொழியும் பீடுற வோங்கப் பாடுபடலும் பிறவும் வாய்ந்து திகழமுடியாதென்பது ஒருதலை. பட்டறை வாய்த்தாலன்றிப் பணி வாயாதல்லவா? துணை வாய்த்தாலன்றிச் சிறப்பு அணையாதல்லவா?