பக்கம் எண் :

12

  வேதநாயகம் பிள்ளை வரலாறு
       அதனால், பெண்கள் கற்று அகக்கண்கள் உடையராய்த் திகழவேண்டு மென்னும் சீரிய நன்னோக்கம் கொண்டு 'பெண்மதிமாலை' யென்னும் நூலொன்று "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக" இயற்றி, 1869-ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அதன்பின்னரே பெண்ணுலகம் விழித்தெழுந்து நண்ணுங் கல்வி கற்று நலமுற்றது.
  பிரதாப முதலியார் சரித்திரம்
       1876-ஆம் ஆண்டில் கற்பனை நுட்பங்கள் பொற்புற அமைய, உலகியல் முறைகள் உள்ளங்கை நெல்லியென நிலவ, அறிவு ஆண்மை முறைமை உதவி செய் நன்றியறிதல் வறுமையிற் செம்மை கற்பு முதலிய பலவும் திகழ, கிளைக்கதைகள் பல செறிய, இன்சுவை நடைத்தாய்ப் பிரதாப முதலியார் என்னும் பெயர் பொறித்துக் கதைநூல் ஒன்று வெளிப்படுத்தினர். அந்நூல் அனைவர்களாலும் எந்நாளும் போற்றப்பட்டுவருகின்றது. இதன் சிறப்புணர்ந்த பலர் வேண்டுகோளின்படி இதனை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.
  தக்காரினத்தராதல்
       மாபெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சி. வை. தாமோதரம் பிள்ளை, கோபாலகிருட்டின பாரதியார், சென்னைச் சுப்பராயச் செட்டியார், புதுவை வித்துவான் சவரி ராயலு நாயகர் முதலிய தவலருந் தொல்கேள்வித் தன்மையுடைய தக்காரினத்தராய்த் தாம் ஒழுகினர். இக்காலத்தே மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள்மீது குளத்தூர்க் கோவை என்னும் ஒரு நூல் பாடி நல்கினர்.