பக்கம் எண் :

வெள்ளி வீதியிலே537

யுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம்
நகரமெல்லாம்கொள்ளையும் கொலையுமாக இருந்தது.ஒரு வாரத்துக்குப்
பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு
வந்தார்கள்.வரைமுறையில்லாமல் கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி
விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத் தொடங்கினார்கள்!நாதிர்ஷாவும்
ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ்
இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது.சுமார் ஆயிரம்பேர்
தூக்கிலிடப்பட்டார்கள்.

     அத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி
பெற்ற ‘சாந்தினி சவுக்’ கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று
கொண்டிருந்தான்.நடந்து கொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின்
முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள் எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து
கொண்டிருந்தன.அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது
அவனுடைய உடம்பு சிலிர்த்தது.ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது
போலிருந்தது.

     இன்னொரு பக்கத்தில் அளவில்லாத அதிசயம் அவனைப்
பற்றிக்கொண்டிருந்தது.இவ்வளவு கொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும்
உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவு
கலகலப்பாயிருக்கிறது!எத்தனை கடைகள்?அவற்றில் எவ்வளவு விலை
உயர்ந்த பொருள்கள்!வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும்
ஜனக்கூட்டதை என்னவென்று சொல்வது?எத்தனை விதமான ஜனங்கள்?
எத்தனை நிலத்தினர்?எத்தனை மதத்தினர்?ஹிந்துக்கள், முஸ்லிம்கள்,
சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள்,
அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா!இது என்ன கூட்டம்?இது என்ன பணப்
பெருக்கம்?அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்?
‘சரித்திரம் திரும்பி வரும்’என்று சொல்கிறார்களே?ஒருவேளை ‘மறுபடியும்
இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்தசை ஏற்படுமா?கொள்ளையும் கொலையும்
இங்கே நடக்குமா?