பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி105

முத்துக்குமரன். கோபாலோ - இண்டர்வ்யூவின்போது தான் முதன் முதலாக
மாதவியையே தான் சந்திப்பது போல் தன்னையே நம்ப வைத்துப் பேசிக்
கொண்டிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். மாதவிக்குத் தமிழ்
டைப்ரைட்டிங் தெரியும் என்று சொல்ல வந்தபோது கூட,

     ‘‘மாதவிக்கு நல்லா டைப்ரைட்டிங் தெரியும்னு இண்டரவ்யூவிலே
சொன்னா, அவளையே டைப் பண்ணச் சொல்றேனே?’’ - என்றுதான் சொல்லி
ஏமாற்றியிருந்தானே ஒழிய அவளைத் தனக்கு ரொம்ப நாளாகத் தெரியும்
என்பதைக் கோபால் தன்னிடம் மறைக்கிறான் என்பதாகவே
முத்துக்குமரனுக்குப் புரிந்தது.

     ஸலூனிலிருந்து திரும்பி வந்தபோது காலை பதினோரு மணிக்கு
மேலாகிவிட்டது. அப்போது மாதவி டைப் செய்ய வேண்டிய வேலையை
முடித்து முதலிலிருந்து டைப் செய்த தாள்களில் பிழையாக டைப்
ஆனவற்றைத் தேடிப் பார்த்துத் திருத்திக் கொண்டிருந்தாள். முத்துக்குமரன்
உள்ளே போய்க் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தான். மாதவி அவனை
உற்றுப் பார்த்துவிட்டுக் கூறினாள்:

     ‘‘திடீர்னு இளைச்சுப்போன மாதிரித் தெரியறீங்க...முடியை ரொம்பக்
குறைச்சு வெட்டிட்டாங்க போலிருக்கு.’’

     ‘‘கவனிக்கலே! முடி வெட்டறப்ப நல்லா உறக்கம்
வந்திச்சு...உறங்கிட்டேன்...’’

     ‘‘நாடகம் நல்லா முடிஞ்சிருக்கு. தலைப்பு இன்னும் எழுதலியே? என்ன
பேர் வைக்கப் போறீங்க இந்த நாடகத்துக்கு?’’

     ‘‘கழைக் கூத்தியின் காதல்’னு வைக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்ன
நினைக்கிறே?...’’

     ‘‘எனக்கும் அது சரின்னுதான் தோணுது...’’