| 	 னால் கண்டுபிடிக்கவோ கணிக்கவோ முடியாமல் இருந்தது.                   மியூஸியம் தியேட்டரின் வட்டவடிவமான அழகிய சிறிய கட்டிடமும்,     ஆர்ட் காலரியின் முகலாயபாணி கலந்த கட்டிடமும் அவனை வியக்கச்     செய்தன. மியூஸியத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரமாயிற்று. வந்த     புதிதில் சென்னையில் பொது இடங்களில் சுபாவமாக அவன் ஒரு பிரச்னையை     மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் தமிழில் கேட்ட     கேள்விக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. தமிழிலேயே பதில்     கூறியவர்கள் ரிக்ஷாக்காரர்கள், டாக்ஸி டிரைவர்கள் மட்டுமே. அந்தத்      தமிழும் அவனுக்குப் புரியவில்லை. மதுரையில் மிகச் சிறிய பையனாக     இருந்தாலும், நீங்க, வாங்க, போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார்கள்.     சென்னையிலோ பதினைந்து வயதுப் பையன் எழுபது வயதுக் கிழவனைப்     பார்த்துக்கூட ‘இன்னாப்பா’ என்றுதான் பேசினான். ஆங்கிலம்     முத்துக்குமரனுக்கு அறவே தெரியாது. தமிழிலும் - சென்னைத் தமிழ் புரியச்     சிரமமாயிருந்தது. பலமொழிக் கலப்பில் சென்னைத்தமிழ் கதம்பமாயிருந்தது.                மழை காரணமாக மியூஸியத்திலோ, நூல்நிலையத்திலோ, ஆர்ட்     காலரியிலோ கூட்டமே இல்லை. எல்லாவற்றையும் பார்த்து முடித்தபின்     வெளியே வந்தபோது மறுபடி மழை பிடித்துக்கொண்டு விட்டது. டெலிபோன்     டைரக்டரியில் நடிகன் கோபாலின் முகவரி தெரியாததால் ஹோட்டல்     ரிஸப்ஷனிஸ்ட் விசாரித்துக் கொடுத்த முகவரியை ஒரு துண்டுக் காகிதத்தில்     குறித்துச் சட்டைப்பையில் மடித்து வைத்திருந்தான் முத்துக்குமரன்.                இப்போது எடுத்துப் பார்த்தபோது, அது மழைச்சாரலில் சிறிது நனைந்து     ஈரமாகியிருந்தது. இந்த மழையில் கோபாலின் வீட்டுக்கு எப்படிப் போவது     என்று தெரியாமல் சில வினாடிகள் மனம் குழம்பினான் அவன். பக்கத்தில்     நின்று கொண்டிருந்தவரிடம் மணி கேட்டபோது,  	 |