| 	 அவர் கைக் கடிகாரத்தைப் பார்த்து மூன்றே முக்கால் என்று தெரிவித்தார்.     நாலரை மணிக்கு கோபாலின் வீட்டில் இருக்க வேண்டுமானால் இப்போதே     புறப்படுவது தான் நல்லதென்று தோன்றியது. பஸ்ஸில் போனால் இடம்     தெரிந்து இறங்குவது சிரமமாயிருக்கும். பஸ் ஸ்டாப்பிலிருந்து கோபாலன்     வீடுவரை மழையில் நனைந்து கொண்டே போகவேண்டி இருக்கலாம். பஸ்     ஸ்டாப்பிங்  அருகிலேயே கோபாலன் வீடு இருக்குமா. அல்லது சிறிது     தொலைவு தள்ளி இருக்குமா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாதவை.                இப்போது டாக்ஸியில் போக வேண்டுமென்ற முடிவுக்கு வரவேண்டிய     நிலையிலிருந்தான் அவன். கையில் மிகக் குறைந்த பணவசதியுள்ள     நிலைமையில் டாக்ஸியில் போய்க் கட்டுப்படியாகுமா என்ற கவலையும்      கூடவே எழுந்தது. ‘டாக்ஸியில் போகாவிட்டால் இன்று கோபாலைப்      பார்க்கவே முடியாது’ என்ற கவலையும் சேர்ந்து உண்டாயிற்று. கோபாலைப்     பார்க்காவிட்டால் வேறு பல அசௌகரியங்களைத் தாங்கிக் கொள்ள     வேண்டியிருக்கும் என்பதால் அவனைப் பார்ப்பது உடனே அவசியம் என்ற     முடிவுடன் டாக்ஸிக்காக பாந்தியன் ரோடு பிளாட்பாரத்துக்கு நனைந்து     கொண்டே வந்தான் அவன்.                மழை நேரமாதலால் காலி டாக்ஸிகள் தென்படவே இல்லை, பத்து     நிமிஷத்திற்குப்பின் ஒரு டாக்ஸி கிடைத்தது. அவன் ஏறி உட்கார்ந்ததும்     மீட்டரைப் போட்டுவிட்டு டாக்ஸிக்காரன், ‘‘எங்கே?’’ - என்று கேட்டான்.     சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த துண்டுத்தாளை எடுத்துப் பிரித்து,     ‘‘போகரோடு - மாம்பலம்’’ என்று முத்துக்குமரன் படித்ததும் டாக்ஸிக்காரன்     திரும்பிப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். உடனே முத்துக்குமரன் தன்     கையிலிருந்த துண்டுத்தாளை அப்படியே டாக்ஸிக்காரனிடம் நீட்டினான்.  	 |