கும் ஒரு நிமிஷம் மேடையில் தோன்றினாலும், தான் தோன்றுகிற ஒரு நிமிஷத்தில் கதாநாயகனைவிட அதிக முக்கியத்துவத்தோடு தோன்றிப் பேசி அட்டகாசம் செய்துவிட்டுப் போய்விட வேண்டுமென்ற ஆசை இருப்பதை முத்துக்குமரன் கண்டான். கலையில் எந்தத் துறையிலும் குறைவான ஆத்ம வேதனையும், அதிகமான ஆசையும் உடையவர்களே நிறைந்து தென்படுவதைச் சென்னையில் கண்டான் அவன். ஏதாவதொரு முன்னணி நடிகனுடைய பணமும், புகழும், கார்களும், பங்களாக்களுமே முன்னணிக்கு வராத ஏழை உபநடிகனின் கனவில் இருந்து கொண்டு தூண்டினவே தவிர, உழைப்பின் முனைப்போ, திறமை அடைய வேண்டுமே என்ற ஆர்வமோ தூண்டவில்லை. கலைத்துறைக்கு இப்படிப்பட்ட தூண்டுதல் பெருங் கெடுதல் என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான். மறுநாளும் ஒத்திகைக்காக அவர்களை வரச்சொல்லி விடை கொடுத்து அனுப்பும்போது மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. உப நடிகர்களை கூட்டமாக ஏற்றிக் கொண்டு வந்த ‘வேன்’ மறுபடியும் ஒரு மந்தையை உள்ளே அடைப்பதுபோல் திருப்பி ஏற்றிக்கொண்டு பெருத்த ஓசையுடன் பங்களாவிலிருந்து வெளியேறியது. புறப்பட்டுப் போகிற வேனைப் பார்த்தபடி மாதவியிடம் முத்துக்குமரன் கூறினான்: ‘‘ஒவ்வொரு நடிகரும் தன்னைச் சேர்ந்த பத்துப்பேருக்கு வேலை கொடுக்கலாம்னுதான் இப்படி ஒரு நாடகக் குழுவே ஏற்படுத்திக்கிறாங்கண்ணு தெரியுது.’’ ‘உண்மை அதுதான்! ஆனா - அப்படி நினைக்காமே நல்ல கலை நோக்கத்தை வைத்துத் தொடங்கறவங்ககூட நாளடையில் நீங்க சொன்ன மாதிரி ஆயிடறாங்க...’’ ‘‘உப நடிகர்களுக்கு மாதச் சம்பளமா? அல்லது நாள் கூலியா? எப்படி இங்கே நடை முறை?’’ |