| தெரிஞ்சது ஒரே உலகம்தான். பசி, தாகம், வறுமை, நிறைவு, ஏக்கம் எல்லாம் அந்த உலகத்திலேதான் இருக்கும் - நீங்க வேறே ஏதோ உலகத்தைப் பத்திச் சொல்லுறீங்க...’’ ‘‘என்னங்க இப்படிச் சொல்றீங்க? கலை உலகத்திலே தானே நீங்க, நான் கோபால் சார் எல்லாருமே இருக்கோம்’’. ‘‘அதெப்படி? நீங்களும், நானும் சேர்ந்து ஒரே உலகத்திலே இருக்க முடியுமானா அப்படி ஒரு உலகம் நிச்சயமா இருக்கவே முடியாது?’’ ‘‘என்ன சார் இது? ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கிட்டிருந்தோம்னாக் கடைசி வரை பேட்டி ஒரு வரி கூட எழுதிக்க முடியாது.’’ ‘‘வருத்தப்படாதீங்க. உங்களுக்குத் தேவையானதைச் சொல்லிடறேன். என்ன வேணும்னு கேளுங்க இப்போ?’’ ‘‘அதுதான் அப்பவே கேட்டுப்புட்டேனே? நீங்கதான் இன்னும் பதிலே சொல்லலை. இல்லாட்டி இன்னொன்னு செய்யலாம் நீங்க பதில் சொல்ற மாதிரியும் - நான் கேள்வி கேக்கற மாதிரியும் நானே ஒரு பேட்டிக் கட்டுரை எழுதிக்கிட்டு வர்றேன். அதிலே...நீங்க ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுத்திடுங்க...போதும்.’’ ‘‘படிச்சுப் பாத்திட்டா இல்லே படிக்காமலேயேயா?’’ ‘‘ஏன்? படிச்சிட்டே வேணாக் கையெழுத்துப் போடுங்களேன்...’’ முத்துக்குமரனுக்கு இதைக் கேட்டு அடக்கமுடியாமல் கோபம் வந்தது. ஆனால் ஜில் ஜில்லை ஓர் ஆளாகப் பொருட்படுத்தி அவன்மேல் கோபப்படவேண்டுமென்று நினைக்கிற நினைப்பைக்கூட அலட்சியப்படுத்த வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. கொஞ்ச நேரம் ஜில் ஜில்லின் வாயைக் கிளறி வம்பு செய்ய வேண்டுமென்று |