| அவனுக்கும் ஆசையாகவே இருந்தது. முதல் கேள்விக்குப் பதிலாகப் பிறந்த தேதி, குடும்பப் பெருமை, மதுரையில் பாய்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தது - ஆகிய விவரங்களைக் கூறிவிட்டு அடுத்த கேள்வியை ஜில் ஜில்லிடமிருந்து எதிர்பார்த்தான் முத்துக்குமரன். இரண்டாவது கேள்வியைத் தொடங்குவதற்குள்ளேயே ரொம்பவும் சோர்ந்து விட்டவனைப்போல ஜில் ஜில் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிக் கொண்டு முத்துக்குமரனிடமும் ஒன்றை நீட்டினான். முத்துக்குமரன் மறுத்து விட்டான். ‘‘வேண்டாம், தேங்க்ஸ்....ரொம்ப நாளைக்கு முன்னாடிப் பழக்கம் உண்டு. இப்பக் கொஞ்ச நாளா விட்டுட்டேன்.’’ ‘‘அடேடே? கலையுலகுக்கு வேண்டிய தகுதி ஒண்ணு கூட உங்ககிட்டே இல்லையே.’’ ‘‘இப்படிச் சொன்னீங்களே மிஸ்டர் ஜில் ஜில்! இதுக்கென்னா அர்த்தம்?’’ ‘‘பொடி, புகையிலை, வெத்திலை பாக்கு, சிகரெட், மது, மாது ஒண்ணுமே இல்லாமே ஒருத்தரு எப்படிக் கலைஞராயிருக்க முடியும்?’’ ‘‘இருந்தா ஒத்துக்க மாட்டீங்களோ?’’ ‘‘சே! சே! அப்படிச் சொல்லிவிட முடியுங்களா?’’- என்று சொல்லியபடியே சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் ஜில் ஜில். அவனுடைய கொக்கி போன்ற உருவம் புகையை இழுத்து உள்ளேயும் வெளியேயுமாக விடுவதை முத்துக்குமரன் வேடிக்கை பார்த்தான். அதற்குள் ஜில் ஜில் தன்னுடைய இரண்டாவது கேள்வியைத் தொடங்கிவிட்டான். ‘‘நீங்கள் எழுதிய அல்லது நடித்த முதல் நாடகம் எது?’’ ‘‘ஏதோ ஒரு நாடகத்தை நான் எழுதியிருக்கணும் அல்லது நடிச்சிருக்கணும்கிறது மட்டும் நிச்சயம் ஞாபக |