| மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிட்டிருக்காரே அந்த ஆளு? இதைக் கோபால் சார் பார்த்தா என்ன நெனைப்பாரு?’’ ‘‘ஓகோ! நீ கோபால் சாருக்கு நடுங்க ஆரம்பிச்சாச்சா. உருப்பட்டாப்லதான் போ...’’ ‘‘நடுங்கலே, சும்மா ஒரு ‘இது’க்குச் சொன்னாலே இப்படிக் குத்திக் காட்டறீங்களே?’’ ‘‘புலிகளுக்கு நடுங்கும் மான்களை எனக்குப் பிடிப்பதில்லை...’’ ‘‘அப்படியானால் நான் நடுங்கற அந்தப் புலி இங்கே தான் இருக்காக்கும்...’’ என்று அவனுடைய நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து விட்டுச் சிரித்தாள் மாதவி. முத்துக்குமரனும் பதிலுக்குச் சிரித்தான். ஆனாலும் அவன் மனத்தின் அந்தரங்கத்தில் அவள் நடிகன் கோபாலுக்காகப் பயந்து சாகிறாள் என்பது புரிந்துதான் இருந்தது. அவளுடைய பேதமையை அளவுக்கு மீறிச் சோதித்துப் பயமுறுத்த அஞ்சியே இவன் அப்போது சிரித்துவிட்டுச் சும்மா இருந்தான் என்று சொல்ல வேண்டும். அவளோ அவனுடைய கம்பீரத்துக்கு முன் தன்னுடைய பயம் என்ற சிறுமையை வைப்பதற்கு அஞ்சித் தயங்கி நின்று விட்டாள். ஜில்ஜில் மேலும் சில உப்புச்சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுப் பதில்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு போய்விட்டான். அன்றிரவு ஸ்டேஜ் ரிஹர்சல் நாரத கான சபா கீத்துக் கொட்டகையில் நடந்தது. ரிஹர்சல் அபார வெற்றிதான். முடியும்போது இரவு பதினோரு மணி. எட்டு மணிக்குத் தொடங்கிப் பதினோரு மணிக்குக் கச்சிதமாக நாடகம் முடிந்தது. மூன்று மணி நேரமே இருக்கலாமா, இரண்டரை மணி நேரமாகக் குறைத்துவிடலாமா என்று |