| குமரன் பதில் கூறி ஜில்ஜில்லின் வாயை அடைத்தான். மறுநாள் மாலை அண்ணாமலை மன்றத்தில் ஹவுஸ்புல். பெருங்கூட்டம் டிக்கட் பெற முடியாமலே திரும்பியது. நாடகம் சரியாக ஆறு மணிக்குத் தொடங்கியது. மந்திரியும், பினாங்கு வியாபாரி அப்துல்லாவும் ஐந்தே முக்கால் மணிக்கே வந்து விட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் வசனத்துக்கும், நடிப்புக்கும், பாடலுக்கும் மாறி மாறி கரகோஷம் எழுந்தது. நாடக இடைவேளையின் போதே பினாங்கு வியாபாரி அப்துல்லா கிரீன் ரூமுக்கு வந்து, கோபாலிடம் ‘‘ஜனவரி மாதம் தமிழர் திருநாள் பொங்கல் முதல் ஒரு மாதம் மலாயாவுக்கு வந்து இதே நாடகத்தை ஊரூராப் போடுங்க. ரெண்டு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட். பிரயாணச் செலவு, தங்க ஏற்பாடு எல்லாம் எங்கள் பொறுப்பு. இதுக்கு அவசியம் நீங்க ஒப்புக் கொள்ளணும்’’ - என்று வேண்டுகோள் விட்டார். கோபாலுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் நோக்கம் நிறைவேறி விட்டது என்ற பெருமிதமும் வந்தது. இடைவேளைக்குப் பிறகு நாடகம் திருப்புமுனைச் சம்பவங்களால் மெருகேறிப் பிரகாசித்தது. மாதவியின் நடனமும், நடிப்பும், பாடலும் கைதட்டலால் தியேட்டரையே அதிரச் செய்தன. கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில் மந்திரியும், அப்துல்லாவும் மேடையேறினர். மந்திரிக்கு முன் மைக் வைக்கப்பட்டது. மாலை போடப் பட்டது. அவர், பேசினார்: ‘‘தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் |