11 முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன. நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால். மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால். ‘‘அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- ’’ |