இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்: ‘‘மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே...’’ ‘‘என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து, ‘‘ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்’’ - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான். கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று, கோபாலோ கார் பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. இரவு சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மாதவி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். முத்துக்குமரன் அவுட்ஹவுஸு க்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். பத்து நிமிஷங்களுக்குள் ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து நாயர்ப் பையன் பேசினான்: ‘‘கொஞ்சம் இங்கே வந்து போக முடியுமான்னு ஐயா கேக்கறாரு.’’ ‘‘இப்ப தூங்கியாச்சு, காலையிலே பார்க்கலாமின்னு சொல்லு’’ என்று பதில் கூறி ஃபோனை வைத்தான் முத்துக்குமரன். சிறிது நேரம் கழித்து மறுபடி ஃபோன் மணி அடித்தது. மாதவி பேசினாள்: ‘‘அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறதிலே உங்களுக்கு என்னதான் சந்தோஷமோ தெரியலை. வீணா |