| கோபித்துக் கொள்ள முயல்வதும் முயற்சி தோல்வியடைந்து, தன்னிடமே சரணடைய வருவதுமாகக் கோபால் இரண்டுங்கெட்ட நிலையிலிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ‘‘இன்னும் ரெண்டு வாரத்திலே மலேயா புறப்படணும். ஒரு மாசம் நாடகக் குழுவோட அங்கே போகணும்னா அதுக்கு எவ்வளவோ ஏற்பாடு செய்யணும், இப்பவே பிடிச்சுத் தொடங்கினால்தான் முடியும்’’ - என்று மறபடியும் கோபாலே பேச்சைத் தொடங்கினான். ‘‘அதற்கென்ன? கூப்பிட்டால் போக வேண்டியது தானே?’’- என்று இதற்கும் முத்துக்குமரனிடமிருந்து மிகச் சிக்கனமான பதிலே கிடைத்தது. இப்படி அவன் கூறிய ஒவ்வொரு சிக்கனமான பதிலும் கோபாலை என்னவோ செய்தது. ‘‘நீ பேசின பேச்சாலே அப்துல்லா மனசு சங்கடப்பட்டிருக்குமோன்னுதான் நான் பயந்தேன். நல்ல வேளையா அவரு அப்பிடி எதுவும் காண்பிச்சுக்கலே. ஆனா இப்பப் பார்க்கறப்ப நான் பேசின பேச்சாலே உன் மனசு சங்கடப்பட்டிருக்கும் போலத் தெரியுது.’’ ‘‘.........’’ ‘‘நான் ஒண்ணும் தப்பாச் சொல்லிடலை.’’ ‘‘நான்தான் நேத்தே சொன்னேனே, அச்சமே கீழ்களது ஆசாரம்னு’’- ‘‘அதைப் பத்திப் பரவாயில்லை. நான் பயந்தாங்கொள்ளீன்னு நீயே திட்டினா அதை நான் ஒப்புத்துக்க வேண்டியதுதானே?’’ ‘‘நான் உன்னையோ இன்னொருத்தரையோ குறை சொல்லலியே? ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’னு ஒரு பழைய பாட்டுச் சொன்னேன், அவ்வளவுதான்.’’ |