| ணங்களை உண்டாக்கும் என்று நினைத்து அஞ்சியபடியே கோபால் கூறியவற்றை மனமில்லாமல் காதில் வாங்கிக் கொண்டு நின்றாள் அவள். ‘‘பினாங்கு அப்துல்லா ஒரு தினுசான பேர்வழி. நீதான் கவனிச்சுக்கணும். அவரை ‘ஓஷியானிக்’லேருந்து கூட்டியாரதுக்கே உன்னைத்தான் அனுப்பப்போறேன்.’’ ‘‘........’’ ‘‘என்னது! நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ எங்கேயோ பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்கறே?’’ ‘‘இல்லே; நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுத்தான் நிக்கிறேன். ‘ஓஷியானிக்’ ஹோட்டலிலே போயி அப்துல்லாவைக் கூட்டியாரணும், அப்புறம்?’’ ‘‘அப்புறம் என்ன? அவரு மனசு சந்தோஷப்படறாப்பல பார்த்துக்கணும். உனக்கு நான் படிச்சுப் படிச்சுச் சொல்லணும்கிற அவசியமில்லே? நீயே எல்லாம் பார்த்துக் குறிப்பறிஞ்சு செய்யக்கூடியவ...’’ ‘‘........’’ ‘‘விருந்துக்கு யார் யாரை அழைச்சிருக்கேன்கிற லிஸ்டு விவரம்லாம் செகரெட்டரிகிட்ட இருக்கும். அதை வாங்கித் திரும்பப் பார்த்து உன் குரலாலே ஒரு தடவை ‘ரிமைண்ட்’ பண்ணினயின்னா பிரமாதமா இருக்கும்’’ - என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்களைச் சிமிட்டிக் கொண்டே செழிப்பான அவள் முதுகில் சுபாவமாகத் தட்டிக் கொடுத்தான் கோபால். வாழ்வில் இதுவரை இப்படி ஓர் ஆடவன் தட்டிக் கொடுப்பதில் பயிர்ப்போ, நாணமோ, கூச்சமோ அடைந்திராத அவள் இன்று அவற்றை அடைந்தாள். கோபாலின் கைபட்ட இடம் இன்று அவளுக்கு அருவருப்பை அளித்தது. முத்துக்குமரன் அவளை அந்த அளவு மாற்றியிருந்தான். |